
உலகில் உள்ள மிகப் பெரும் அருட்கொடை.
அல்லாஹ் மனிதனுக்கு மட்டில்லா அருட்கொடைகளை வழங்கியுள்ளான்.
நாம் அனைவரும் அவனின் அருட்கொடைகள் மற்றும் செல்வங்களில் புரண்டு கொண்டிருக்கின்றோம்.
செவிப்புலன், கட்புலன்,சிந்தனா சக்தி, உடல் ஆரோக்கியம், செல்வம், குடும்பம் போன்ற மனிதர்களுட் பலர் பெற்றிராத கிடைப்பதற்கரிய பல அருட்கொடைகளை அல்லாஹ் எமக்கு அருளியிருக்கின்றான்.
இவை மட்டுமல்லாது, உலகிலுள்ள சூரியன், வானம், பூமி, அதிலுள்ள படைப்புக்கள் உள்ளிட்ட முழுப் பிரபஞ்சத்தையும் அவன் எமக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்.
மேலும், அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணுவீர்களாயின், அதனை நீங்கள் (கணக்கிட்டு எண்ணி) வரையறுத்துவிடமாட்டீர்கள். (அன் நஹ்ல் : 18)
இஸ்லாம், உலகில் காணப்படுகின்றமிகப் பெரும் அருட்கொடையாகும்.
எனினும், இந்த அருட்கொடைகள் அனைத்தும் எமது குறுகிய கால வாழ்வு நிறைவுறுவதோடு முடிந்து போகும்.
இஸ்லாமியனாக வாழுதல் எனும் அருளைப் பொறுத்தவரையில் அது மாத்திரமே உலகிலும் மறுமையிலும் நிலையான சந்தோஷத்தையும், சுபீட்சத்தையும் தரவல்லதாகும்.
அல்லாஹ் தனது அடியார்களுக்கு வழங்கிய அருட்கொடைகளுல் இதுவே மிகப் பெரிய அருட்கொடை ஆகும்.
இதன் காரணமாகவே, ஏனைய அருட்கொடைகளை விட இந்த அருட்கொடையை மேன்மைப்படுத்தும் நோக்கோடு தனது அருட்கொடை என இதனை தன்னோடு இணைத்து அல்லாஹ் பேசுகின்றான் :
இன்றைய தினம் உ ங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை பரிபூரணமாக்கி வைத்து விட்டேன்; என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையுமாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டேன். என அல்லாஹ் கூறியிருக்கிறான். (அல் மாஇதா : 3)
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகள் எத்துணை மகத்தானது! மனிதனை அல்லாஹ் (அறியாமை) எனும் இருளிலிருந்து வெளியேற்றி (நம்பிக்கை) எனும் ஒளியின் பால் செலுத்தியிருக்கின்றான்.
மேலும் அல்லாஹ், தான் ஏற்று அங்கீகரித்த சத்திய மார்க்கத்தின் பால் அவனுக்கு வழிகாட்டியிருக்கின்றான்.
இது மனிதன் படைக்கப்பட்ட நோக்கமான அல்லாஹ்வை வணங்குதல் எனும் இலக்கை அடைந்து, உலகினது சுபீட்சத்தையும் மறுமையின் நற்கூலியையும் பெற்றுக்கொள்ள துணை நிற்கும்.
அல்லாஹ் எமக்குச் செய்திருக்கும் அனுகூலங்களும் செல்வங்களும் எத்துணை மகத்தானது! நபிமார்கள் அனைவருக்கும் அல்லாஹ் கொடுத்தனுப்பிய தூதான லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவைச் சுமந்து செல்வதற்கு அவன் எங்களைத் தெரிவு செய்து, மனித நலனுக்காக வெளிக்கொணரப்பட்ட சிறந்த சமூகத்தவர்களாக எம்மை ஆக்கியிருக்கின்றான்.
சில அறிவீனர்கள், அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமையானது நபியவர்களுக்கு செய்த உதவியென நினைத்து, அதனைச் சொல்லிக்காட்டத் துவங்கிய போது, அல்லாஹ்வே அவர்களுக்கு இஸ்லாத்தின் பால் வழிகாட்டி உதவினான். (அவர்கள் எந்த உதவியையும் அவன் தூதருக்குச் செய்யவில்லை) என்பதை அல்லாஹ் அவர்களுக்கு நினைவுபடுத்தினான்.
இதனை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :
(நபியே!) அவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்ததன் காரணமாக, உமக்கு உபகாரம் செய்து விட்டதாக அவர்கள் கருதுகின்றனர்; (நபியே!) நீர் கூறும்: நீங்கள் இஸ்லாத்தில் சேர்ந்ததனால் என் மீது உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், விசுவாசம் கொள்ள வாய்ப்பளித்து உங்களை நேர் வழியில் செலுத்தியதனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கின்றான்; நீங்கள் (உங்கள் விசுவாசத்தில்) உண்மையாளர்களாக இருந்தால் (இதனை நன்கறிந்து கொள்வீர்கள்). (அல் ஹுஜுராத் : 17)
அல்லாஹ்வின் அருட்கொடைகள் ஏராளம். ஆனாலும், எங்களின் மீது அருள்பாலித்ததாக அவன் பிரஸ்தாபிக்கும் ஒரே அருள் இஸ்லாமும் அவனை வணங்குவது மற்றும் ஒருமைப்படுத்துவது என்பவற்றின்பால் எமக்கு வழிகாட்டியிருப்பதுமே ஆகும்.
எனவே, இந்த அருள் நிலைத்திருக்க வேண்டுமானால், நாம் இதற்கு நன்றி செலுத்த வேண்டும்.
இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நான் அதிகப்படுத்துவேன். (இப்றாஹீம் : 7)
பின்வரும் இரண்டு அம்சங்களினால் இதனைச் செய்ய முடியும்.
-
1
தீனைப் பின்பற்றுதலும் அதன் போது ஏற்படும் துயரங்களை சகித்துக் கொள்ளலும்.
-
2
ஏனையவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி, அதன் பால் அவர்களை அறிவுபூர்வமாகவும் நிதானமாகவும் அழைத்தல்.
-