
நாம் வாழ்வதற்கான நோக்கம்.
எமது வாழ்வு தொடர்பான இம்முக்கிய வினாவிற்கு விடையளிக்கும் போது படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி பலரும் தடுமாறுகின்றனர்.
நாம் ஏன் வாழ்கிறோம் ?
எமது வாழ்வின் இலக்கு யாது ?
இவ்வுலகில் மனித வாழ்வின் இலக்கு பற்றி மிகத்தெளிவாகவும், நுணுக்கமாகவும் அல்- குர்ஆன் பின்வரும் வசனத்தில் விவரித்துள்ளது. :
ஜின் இனத்தையும், மனித வர்க்கத்தையும் என்னை வணங்குவதற்கேயன்றி வேறு எதற்கும் படைக்கவில்லை (அத் தாரியாத்:56)
பூமியிலே நாம் வாழ்வதற்கான ஒரே நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதாகும். அவையல்லாத ஏனையவைகள் அவ்விலக்கை முழுமைப்படுத்தவும் அவற்றுக்கு துணை நிற்பதற்குமாகும்.
இஸ்லாத்தின் பார்வையில் இபாதா என்பது துறவறமோ, அல்லது இவ்வுலக வாழ்வின் இன்ப, சுகங்களைத் துண்டித்து தூர விலகி வாழ்வதாகவோ இல்லை.
மாறாக, அது தொழுகை, நோன்பு, ஸகாத் முதற்கொண்டு விளையாடுதல், மனைவியோடு சுகம் அனுபவித்தல் உள்ளிட்ட அனைத்து மனித செயற்பாடுளையும் உள்ளடக்குகின்றது.
இவைகள் அல்லாஹ்விற்காக என்ற நல்லெண்ணத்தோடு செயற்படுத்தப்படல் வேண்டும்.
இதனையே நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
உங்களது மனைவியோடு நீங்கள் உங்களது ஆசையை பூர்த்தி செய்துகொள்வது கூட ஸ தகாவாகும். (முஸ்லிம் : 1006)
அதாவது, ஒரு முஸ்லிம் தனது மனைவியோடு உறவுகொள்வதன் மூலமும் நன்மையைப் பெறுகின்றான்.
இந்த வகையில், இபாதா என்பது மனித வாழ்வின் பிரதான இலக்காக இருப்பதற்கப்பால், அது வாழ்வின் சாராம்சமாகவும் மாறுகின்றது.
எனவே, ஒரு முஸ்லிம் தனது நாளாந்த செயற்பாடுகளை பல்வேறு வகையான வணக்க வழிபாடுகளாக மாற்றிக்கொள்கின்றான்.
இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
நபியே! நீர் கூறும் எனது தொழுகை, நான் அறுத்துப்பலியிடுவது, எனது வாழ்வு, எனது மரணம் ஆகிய அனைத்தும் அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே (அல் அன்ஆம் : 162)