
அல்லாஹ்விற்கும் அவனது அடியார்களுக்குமிடையே இடைத்தரகர் எவரும் கிடையாது
பல்வேறு சமயங்கள் தமது சமயத்தை பின்பற்றும் அனைத்து மக்களுக்கும் வழங்காத சமய ரீதியிலான சில சிறப்புச் சலுகைகளை அல்லது உரிமைகளை குறிப்பிட்ட சில தனிநபர்களுக்கு மாத்திரம் வழங்கியுள்ளது.

மக்களின் வணக்கங்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் என்பன அவ்வாறான தனிநபர்களின் பொருத்தப்பாட்டோடும் இணத்கப்பாட்டோடும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. (அவர்களின் சமய நம்பிக்கையின் படி) அவர்களே மக்களுக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள இடைத்தரகர்கள் என்றும், அவர்களே மக்களுக்கு பாவமன்னிப்பு வழங்குகின்றனர் என்றும், இன்னும் சில வேளைகளில் அவர்கள் மறைமுகமானவற்றைக் கூட அறிந்துகொள்கின்றனர் என்றும், அவர்களுக்கு மாற்றம் செய்வதானது வாழ்வில் தோல்வி ஏற்பட காரணமாய் அமையும் என்பன போன்ற பல்வேறு அம்சங்களை (அவர்களின் பிழையான கொள்கைக்கேற்ப) அவர்கள் பிழையாகக் கூறுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் இஸ்லாமிய சமயமானது உலகில் தோன்றி, மனிதனை கௌரவப்படுத்தி அவனது அந்தஸ்த்தை உயர்த்தியது.
மேலும், மனிதர்களின் வெற்றி, பாவமீட்சி, வணக்கம் போன்ற அம்சங்கள் உயர்ந்த சில மனிதர்களோடு தொடர்புபடுத்தப்பட வேண்டுமென்ற அவர்களது பிழையான சிந்தனைகளைத் தகர்த்தெறிந்தது.
ஒரு முஸ்லிமுடைய வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு எந்தவொரு மனிதனுடைய உதவியோ துணையோ தேவையற்றதாகும்.
ஏனெனில், அல்லாஹ் தனது அடியானாகிய மனிதனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து அவனது வேண்டுதலுக்கு செவிவாய்த்து விடையளிக்கின்றான்.
மேலும் மனிதனது தொழுகை மற்றும் ஏனைய வணக்கங்கள் என்பவற்றைப் பார்த்து அவைகளுக்கு கூலியும் வழங்குகின்றான்.
பாவ மீட்சி வழங்குவதற்கான அதிகாரம் எந்தவொரு மனிதனுக்கும் உரித்துடையதன்று. எந்தவொரு அடியான் தனது பாவத்திற்காக மனத்தூ ய்மையோடு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் அவனை மன்னித்து விடுகின்றான்.
இயற்கைக்குப் புறம்பான பிரபஞ்சத்தை நகர்த்துகின்ற தெய்வீக சக்திகள் எந்தவொரு மனிதனுக்கும் கிடையாது. அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றன.
இஸ்லாம் ஒரு முஸ்லிமுக்குச் சிந்திக்கும் சுதந்திரத்தை வழங்கியிருப்பதோடு, கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அல் குர்ஆனையும் நபியவர்களின் சொல், செயல்களில் ஆதாரபூர் வமானவைகளை அடிப்படையாக வைத்து, ஆழமாகச் சிந்தித்து முடிவுகளை எடுப்பதற்கும் தூ ண்டியுள்ளது.
அல்லாஹ்வுடைய மார்க்க விடயத்தில் முடிவெடுக்கும் தனிச்சிறப்புரிமை அல்லாஹ்வுடைய தூதரைத் தவிர வேறு எவருக்கும் கிடையாது.
ஏனெனில், அவர் தனது மனோ இச்சையின் பிரகாரம் பேசுபவரல்லர். மாறாக அவர் அல்லாஹ்வின் வஹி மற்றும் அவனது வழிகாட்டல் மூலமே பேசுவார்.
இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் : அவர் தன் மன இச்சையின் படி (எதையும்) பேசுவதுமில்லை. இது அறிவிக்கப்படும் (வஹீயாகிய) அறிவிப்பே தவிர (வேறு) இல்லை. (அந் நஜ்ம் : 3-4)
இந்த மார்க்கத்தை அல்லாஹ் எமக்குத் தந்து அவன் எம் மீது செய்த அருள் எத்துணை மகத்தானது!
இது இதயங்களின் இயல்பு நிலையை ஒத்ததும், மனிதர்களை மேன்மைப்படுத்தி, இறைவனல்லாத வேறு சக்திகளுக்கு கட்டுப்பட்டும் அடிமைப்பட்டும் வாழும் இழிநிலையிலிருந்து மனிதனை விடுவித்த உயர்ந்ததொரு மார்க்கமாகும்.