
இஸ்லாம் ஒரு வாழ்வியல் மார்க்கம்
இஸ்லாம் உலக மற்றும் மறுமை வாழ்க்கைகளுக்கிடையில் சமத்துவத்தைப் பேணுகின்ற ஒரு மார்க்கமாகும்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் உலகம் என்பது ஒரு விளைநிலமாகும். அதிலே ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் சகல நிலைகளிலும் நற்செயல்கள் எனும் விதைகளை நட்டி உலகிலும் மறுமையிலும் அதற்குரிய கூலிகளை தனது உழைப்பின் அறுவடையாகப் பெறுகின்றான்.
இவ்வாறான பயிரிடுதலை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்பு, மனஉறுதி, அதீதஈடுபாடு, தன்நம்பிக்கை போன்ற மனப்பாங்குகளே அவசியமாகும்.
இவைகள் பின்வரும் அம்சங்களில் வெளிப்படுகின்றன:
பூமியை வளப்படுத்தல்:
அல்லாஹ் கூறுகின்றான்:
பூமியிலிருந்தே உங்களை அவன் உருவாக்கினான். மேலும், அந்த பூமியை வளப்படுத்துமாறு உங்களை அவனே பணித்தான். (ஹூத் : 61)
அல்லாஹ் எம்மை இப்பூமியிலே படைத்து, அதனை வளப்படுத்துவதன் மூலம் மனித சமூகத்தின் நலனுக்காக உழைக்க வேண்டுமென அவன் எம்மை பணித்துள்ளான்.
இது இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானது அல்ல. மாறாக பூமியை வளப்படுத்துவதும், விருத்திசெய்வதும் மனிதன் படைக்கப்பட்ட இலக்குகளுள் ஒன்றாகவும் மறுமை நாள் போன்ற குழப்பம் நிறைந்த கடினமான சூழ்நிலைகளில் கூட மேற்கொள்ளப்பட வேண்டிய வணக்க வழிபாடுகளுள் ஒன்றாகவும் இஸ்லாம் இதனை அடையாளப்படுத்துகின்றது.
இதனால் தான் நபியவர்கள் முஸ்லிம் சமூகத்தை நோக்கி இவ்வாறு உபதேசித்தார்கள்:
மறுமை நாள் சம்பவிக்கப்போகும் நிலையில் கூட ஒரு முஸ்லிம் ஒரு பயிரை நடுவதற்கு தயாராக இருப்பின்,அவரால் முடிந்தால் அதனை அவர் நடட்டும். அது அவருக்கு ஸதகாவாக மாறும். (அல் முஸ்னத் :2712)
சமூக உறவுகளைப் பேணுதல் :
சமூகத்தை கட்டியெழுப்பவும் சமூகப் புனரமைப்பில் ஈடுபடவும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உறவாடவும் தங்களுக்கிடையிலான சமய மற்றும் கலாசார வேறுபாடுகளுக்கப்பால் உயர்ந்த பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் நடத்தைகளின் அடிப்படையில் இஸ்லாம் தனது ஆதரவாளர்களை தங்களைச் சூழவுள்ள மக்களோடு ஒன்றிணைந்து சமூக உறவைப் பேணி வாழ்வதற்கும் அழைப்பு விடுக்கின்றது.
மக்களை விட்டு தனித்து, தூரவிலகி வாழ்வது தாயிகளினதோ (இஸ்லாமிய அழைப்பாளர்கள்) சீர்திருத்தவாதிகளினதோ வழிமுறையல்ல.
எனவேதான், நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
மனிதர்களை விட்டும் தூரவிலகி ஒதுங்கி வாழும் ஒருவனை விட மனிதர்களோடு இணைந்து உறவாடி அதன் போது அவர்களினால் ஏற்படும் தவறுகள் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் ஒருவனே சிறந்தவன் (இப்னு மாஜாஹ் : 4032)
அறிவின் மார்க்கம் :
நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கிய அல்- குர்ஆனின் முதல் சொல்லான இக்ரஃ (படி) என்பது எதேச்சையாக நடந்த நிகழ்வொன்றல்ல.
உண்மையாக, மனித இனத்திற்கு அறிவின் பல்வேறு பலன்களை இஸ்லாம் அழுத்திக் கூறிய நிகழ்வாகும்.
ஒரு முஸ்லிம் அறிவைத் தேடிச் செல்வதை சுவனத்தை நோக்கிச் செல்லும் பாதையாக இஸ்லாம் கருதுகின்றது.
இதனை நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
யார் அறிவு தேடி ஒரு வழியில் பயணிக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்திற்கான பாதையை இலகுபடுத்துகிறான் (இப்னு ஹிப்பான்: 84)
வேறு சமயங்களில் காணப்பட்டது போல இஸ்லாத்திற்கும் அறிவியலுக்குமிடையில் எதுவித மோதலும் இருக்கவில்லை.
மாற்றமாக இஸ்லாம் அறிவுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக இருந்துள்ளதோடு மட்டுமல்லாமல் அறிவுக்கு அது எப்போதும் துணை நிற்கின்றது.
மேலும், அது (அறிவு) மனித இனத்துக்கு பயன்களைக்கொடுக்கும் காலமெல்லாம் இஸ்லாமியர்கள் அதனை கற்கவும் கற்பிக்கவும் அவர்களை இஸ்லாம் தூ ண்டுகின்றது.
மனிதர்களுக்கு நல்ல விடயங்களைக் கற்றுக்கொடுக்கும் அறிஞரை இஸ்லாம் கௌரவப்படுத்தியுள்ளதோடு அவர்களை மிகவும் உயர்ந்த நிலையில் வைத்து நோக்குகின்றது.
எனவே தான் நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
மக்களுக்கு நல்ல விடயங்களை கற்பிக்கின்ற அறிஞருக்கு அனைத்துப் படைப்பினங்களும் பிரார்த்திக்கின்றன (அத் திர்மிதி : 2685)

வேறுசமயங்களில் காணப்பட்டதுபோல இஸ்லாத்திற்கும் அறிவியலுக்குமிடையில் எதுவிதமோதலும் இருக்கவில்லை.