
மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான வழிகாட்டல்களை உள்ளடக்கியதொரு மார்க்கமே இஸ்லாம்
பள்ளிவாயில்களில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படுகின்ற தொழுகை, பிரார்த்தனை போன்ற ஆன்மீகத் தேவைகள் மாத்திரமல்ல இஸ்லாம்.
இதனைப் பின்பற்றுபவர்களால் மட்டும் நம்பப்படுகின்ற வெற்றுக் கருத்துக்களாகவோ நம்பிக்கைகளாகவோ ஆகாது.
வெறுமனே இதுவொரு பரந்த பொருளாதார முறைமையாகவுமில்லை.
சமூகக் கட்டமைப்பையும் ஒழுங்கையும் உருவாக்குவதற்கான சட்டவிதிமுறைகளோ கொள்கைத் தொகுப்புக்களோ அல்ல.
பிறமக்களோடு உறவாடவேண்டிய ஒழுக்க பண்பாட்டு அம்சங்கள் அடங்கியதொரு தொகுப்பு மாத்திரமல்ல.
மாறாக, இது மனித வாழ்வின் சகல துறைகளுக்குமான முழுமைபெற்றதொரு வாழ்க்கைத் திட்டமாகும். இது மட்டுமல்ல, இதுவல்லாத வேறு விடயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
முழுமைபெற்ற இந்த அருட்கொடையை முஸ்லிம்களுக்கு அவன் பொருந்தி ஏற்றுக் கொண்ட மார்க்கமாகவும் ஆக்கியிருக்கின்றான். இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை பரிபூரணமாக்கி வைத்து விட்டேன்; என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையுமாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டேன். (அல் மாஇதா : 3)
இணைவைப்பவர்களுள் ஒருவர் நபித்தோழர் ஸல்மான் அல் பாரிஸி (றழி) அவர்களைப் பார்த்து பரிகாசமாக உங்களது தோழர் (நபியவர்கள்) மலசலம் கழிப்பதற்கான ஒழுக்கங்கள் உட்பட அனைத்து விடயங்களையுமே உங்களுக்கு கற்றுத் தருகின்றாரே" என்று கூறிய போது நபித் தோழர் அவர்கள் பெருமையோடு பின்வருமாறு பதிலளித்தார்கள்: 'ஆம், உண்மையாகவே அவர் எமக்கு அனைத்தையும் கற்றுத்தருகின்றார்" என்று கூறிவிட்டு, மலசலம் கழிப்பதற்கான இஸ்லாத்தின் ஒழுங்கு விதிகளை அவருக்கு விளக்கப்படுத்திக் காட்டினார். (முஸ்லிம்: 262)

இஸ்லாம் மனித வாழ்வின் சகல துறைகளுக்குமான முழுமையான வழிகாட்டலை வழங்கும் ஒரு மார்க்கமாகும்.