
ஐம் பெரும் முக்கிய தேவைகள்
மனிதன் இவ்வுலகில் கௌரவமானதொரு வாழ்க்கையை மேற்கொள்வதற்கு இன்றியமையாதவைகளாக கருதப்படுகின்ற பெரும் நலன்களையே இவைகள் குறிக்கின்றன. தெய்வீகம் சார்ந்த அனைத்து மார்க்கங்களும் இவைகளைப் பாதுகாக்குமாறு உத்தரவிட்ட அதேவேளை, இவைகளுக்கெதிரான சக்திகளை தடுத்தும் இருக்கின்றன.
ஒரு முஸ்லிம் இவ்வுலகில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்து ஈருலக நலனுக்காக உழைப்பதற்கும்,

அல்லாஹ் தடைசெய்தவைகளுள் ஒன்றைச் செய்தாவது மனித உயிரைப் பாதுகாக்குமாறு அல்லாஹ் பணித்திருக்கின்றான்.
ஒன்றை மற்றுமொன்று பலப்படுத்தும் கட்டடத்தைப் போன்றும், ஓர் உறுப்பு வேதனைப்படுகின்ற போது ஏனைய உறுப்புக்கள் அனைத்தும் கண்விழித்து, காய்ச்சலினால் வேதனையைப் பகிர்ந்து கொள்ளும் ஓர் உடலைப் போன்றும் முஸ்லிம் சமூகம் ஒற்றுமையுடன் ஒரே சமூகமாக வாழ்வதற்கும் இஸ்லாம் இந்நலன்களை பாதுகாத்திருக்கின்றது. பின் வரும் இரண்டு விடயங்ளைச் செய்வதன் மூலம் இந்த ஐம்பெரும் தேவைகளைப் பாதுகாப்பது சாத்தியமாகும்.
-
1
இவைகளை நிலைநாட்டலும் பாதுகாத்தலும்
-
2
இவைகளுள் குறைகள் ஏற்படாதவாறு பாதுகாத்தல்
-
-
மார்க்கம்
இதற்காகவே அல்லாஹ் மனிதனைப் படைத்தான். மேலும் இதனை பாதுகாக்கவும் இது பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவ்வாறானதொரு பாரிய விடயமே இது. இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் : ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூ தரை அனுப்பியிருக்கிறோம்; (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்,) அல்லாஹ்வையே வணங்குங்கள்; (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்.(என்று கூறினார்கள்) (அந் நஹ்ல் : 36)
மார்க்கத்தில் களங்கம் ஏற்படுத்தி அதன் தூய்மையில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற இணைகற்பித்தல், குருட்டு நம்பிக்கைகள், பாவங்கள், தடைசெய்யப்பட்டவைகள் போன்ற அம்சங்களிலிருந்து அதனைப் பாதுகாப்பதில் இஸ்லாம் கவனம் செலுத்தியிருக்கின்றது.
-
உயிர்
தடுக்கப்பட்ட ஒரு பாவத்தைச் செய்தாவது மனித உயிரை பாதுகாக்குமாறு அல்லாஹ் பணித்துள்ளான். ஏனெனில், இது நிர்ப்பந்த நிலையின் போது மன்னிக்கப்படுகின்றது. இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் : ஆகவே எவரேனும் பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் வரம்பு மீறாமலும் இருந்து, (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டால் அவர் மீது குற்றமாகாது நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்." (அல் பகறா : 173)
ஓர் ஆன்மாவை துன்புறுத்துவது அல்லது கொலை செய்வதை அல்லாஹ் தடைசெய்திருக்கின்றான். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் (உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொண்டு) உங்களது கரங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். (அல் பகார் : 195)
ஒருவன் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், அவனை எதுவித நியாயமுமின்றித் தாக்குவதிலிருந்து தடுப்பதற்கான வரையறைகளையும் தண்டனை முறைகளையும் இஸ்லாம் சட்டமாக்கியிருக்கின்றது. அல்லாஹ் இதனையே இவ்வாறு குறிப்பிடுகின்றான்: விசுவாசங்கொணடோரே! கொலையுண்டவர்கள் விஷயத்தில் (பகரமாக) பழி வாங்குவது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. (அல் பகறா : 178)
-
அறிவு
அறிவு அல்லது சிந்தனையைப் பாதிக்கின்ற அனைத்து விடயங்களையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது. ஏனெனில், இது எமக்கு வழங்கப்பட்ட அல்லாஹ்வின் மிகப்பெரும் அருட்கொடைகளுள் ஒன்றாகும். மனிதனின் கௌரவம் இதிலே தங்கியிருப்பதோடு, இவனை வேறு படைப்புக்களிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும் தனித்துவமானதொரு அம்சமாகவும் உள்ளது. இதன் காரணமாகவே, மனிதன் உலகிலும் மறுமையிலும் தனது செயற்பாடுகளுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவனாக உள்ளான்.
இதனால், அல்லாஹ் அனைத்து விதமான மதுசாரங்கள், போதைப் பொருட்களையெல்லாம் ஹராமாக்கியதோடு அவைகளை ஷைத்தானின் அசுத்தமான செயலாகவும் ஆக்கியிருக்கின்றான். இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: விசுவாசுங்கொண்டோரே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டுள்ளவை (களானசிலை)களும், குறிபார்கும் (சூதாட்ட) அம்புகளும் (ஆகிய இவையாவும்) ஷைத்தானுடைய செயலிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும் ஆகவே, இவைகளைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்; (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல் மாஇதா : 90)
-
சந்ததி
சந்ததிகளைப் பாதுகாக்க வேண்டுமென்று இஸ்லாம் பலமான அழுத்தத்தைக் கொடுப்பதோடு அதிலே அதிகூடிய கரிசனையையும் காட்டுகின்றது. பண்பாடுகளைக் கொண்ட பரம்பரையினர் வாழும் உயர் குடும்பங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளது. இது பின்வருவன போன்ற பல்வேறு சட்டங்களிலிருந்து தெரியவருகின்றது.
• திருமணம் செய்வதையும் அதனை அதிகூடிய செலவுகளின்றி எளிமையாக மேற்கொள்வதையும் இஸ்லாம் தூ ண்டுகின்றது. இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவருக்கு திருமணம் செய்து வையுங்கள்; (அந் நூ ர் : 32)
• பாவமானதும் முறைகேடானதுமான அனைத்துவித உறவுகளையும் அவைகளுக்கு இட்டுச்செல்கின்ற வழிகளையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது. இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: (விசுவாசங் கொண்டோரே!) நீங்கள் விபச்சாரத்தையும் நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது, மானக்கேடானதாக இருக்கிறது. இன்னும், அது (மனித குலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்) வழியால் மிகக் கெட்டது. (அல் இஸ்ராஃ : 32)
• ஒருவர், மனிதர்களின் பரம்பரை மூலம் குறித்து சந்தேகிப்பதை இஸ்லாம் தடைசெய்திருப்பதோடு அதனைப் பெரும் பாவங்களுள் ஒன்றாகவும் கருதுகின்றது. இப்பாவத்திற்கான வேதனையை மறுமையில் அனுபவிப்பதற்கப்பால் இவ்வுலகிலும் குறிப்பிட்டதொரு தண்டனை வழங்கப்படுமெனவும் அல்லாஹ் எச்சரித்துள்ளான்.
• மனிதர்களது கௌரவத்தை அவர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென அல்லாஹ் அவர்களைப் பணிக்கின்றான். ஒருவர், தனது மானத்தையோ அல்லது குடும்ப கௌரவத்தையோ பாதுகாக்கப்போராடி கொலைசெய்யப்பட்டுவிட்டால், அவர் அல்லாஹ்வின் பாதையில் போராடி உயிர்த்தியாகம் செய்த ஷஹீதாக் கணிப்படுகின்றார்.
ஒருவரின் கௌரவம் மற்றும் பரம்பரை என்பவற்றைப் பாதுகாத்தல் இஸ்லாமியச் சட்டங்களின் மிக உன்னத இலக்குகளுள் ஒன்றாகும்.
-
சொத்து
சொத்துக்களைத் திரட்டுவதிலும் அதனைப் பாதுகாப்பதிலும் முனைப்புக்காட்ட வேண்டுமென்று இஸ்லாம் வலியுறுத்தும் அதேவேளை கொடுக்கல் வாங்கல், பணப்பரிமாற்றங்கள் போன்ற வர்த்தக நடவடிக்கைகளை அனுமதிக்கப்பட்ட ஒழுங்கில் மேற்கொள்ளுமாறும் கூறுகின்றது.
சொத்துக்களைப் பாதுகாக்கும் முகமாக வட்டி, களவு, மோசடி, நம்பிக்கைத்துரோகம், பிழையான வழியில் மக்களின் சொத்துக்களைச் சூறையாடுதல் போன்ற அனைத்து தீய வழிகளையும் இஸ்லாம் ஹராமாக்கியிருக்கின்றது. இப்பாதக செயல்களில் ஈடுபடுவோருக்கு மிகவும் கடினமான தண்டனைகள் உண்டெனவும் அல்-குர்ஆன் எச்சரிக்கின்றது.