இஸ்லாமியச் சட்டங்கள்

இஸ்லாமியச் சட்டங்கள்


மனிதனின் சொல், செயல், ஏனைய நடவடிக்கைகள் அனைத்தும் பின்வரும் ஐந்து இஸ்லாமிய சட்டப் பெறுமான நிலைகளுள் ஏதேனுமொரு நிலையை வகிக்கும் :

அல் வாஜிப் (கட்டாயக்கடமை)

ஒரு முஸ்லிம் அவசியம் செய்ய வேண்டுமென அல்லாஹ்வினால் உத்தரவிடப்பட்ட அம்சங்களையே இது குறிக்கும்.

இவைகளைச் செய்த ஒருவர் கூலி வழங்கப்படுவார். செய்யத் தவறியவர் தண்டிக்கப்படுவார்.

உதாரணமாக, பர்ளான ஐந்து நேரத் தொழுகைகள், றமழான் மாதத்தில் நோன்பு நோற்றல் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

அல் ஹறாம் (தடுக்கப்பட்டவைகள்)

அல்லாஹ் தடை செய்த அம்சங்களையே இது குறிக்கும்.

இவைகளை விட்டு விலகிக் கொண்டவர் கூலி வழங்கப்படுவார்.

செய்தவர் தண்டிக்கப்படுவார்.

உதாரணமாக, விபச்சாரம் செய்தல், மதுபானம் அருந்துதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஸுன்னா வல் முஸ்தஹப் (விரும்பத்தக்கது)

வாழ்க்கையில் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் ஊக்கமளித்த விடயங்களையே இது குறிக்கும்.

இவைகளைச் செய்பவர் கூலி வழங்கப்படுவதோடு செய்யாது தன்னை விலக்கிக் கொண்டவர் தண்டிக்கப்படவும் மாட்டார்.

உதாரணமாக, மனிதர்களைப் பார்த்து புன்னகை செய்தல், அவர்களைச் சந்திக்கும் வேளையில் இஸ்லாமிய முகமனைக் கூறுவதில் முந்திக்கொள்ளல், பாதையிலுள்ள அழுக்குகள் மற்றும் இடர் தரும் பொருட்களை அகற்றுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அல் மக்றூஹ் (வெறுக்கத்தக்கது)

இஸ்லாம், செய்யக்கூடாதென ஊக்கப்படுத்திய விடயங்களையே இது குறிக்கும்.

இவைகளைச் செய்யாது தன்னை விலக்கிக் கொண்டவர் கூலி வழங்கப்படுவதோடு, செய்பவர் தண்டிக்கப்படவும் மாட்டார்.

உதாரணமாக, தொழுகையின் போது விரல்களால் விளையாடுவது போன்ற செயல்களைக் குறிப்பிடலாம்.

அல் முபாஹ் (ஆகுமாக்கப்பட்டவை)

அல்லாஹ்வின் ஏவலோ, விலக்கலோ சம்பந்தப்படாத ஒர் அம்சத்தை செய்தலும் செய்யாது விடுதலும்.

உதாரணமாக, வியாபாரம் செய்தல், பயணம் செய்தல், பேசுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.