அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்துக்குரிய (இறைவ)ன் யாரும் இல்லையென்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர் ஆவார் என்றும் சாட்சி கூறுகின்றேன்.
ஏன் இந்த "லா இலாஹ இல்லல்லாஹ்"?
- இதுவே ஒரு முஸ்லிமின் முதற் கடமை. இஸ்லாத்தில் நுழையவிரும்பும் ஒருவா, இதனை நம்பி வாயினால் மொழிதல் வேண்டும்.
- ஏனெனில், ஒருவர் நம்பிக்கை கொண்ட நிலையில் அல்லாஹ்வின் பொருத்தத்தை மாத்திரம் எதிர்பார்த்து இதனை கூறினால், அவரை நரகிலிருந்து பாதுகாப்பதற்கு இதுவே காரணமாய் அமைந்துவிடுகின்றது. இதனையே நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்:"அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடிய நிலையில் ஒருவர் இக்கலிமாவைக் கூறினால், அவருக்கு அல்லாஹ் நரகை ஹராமாக்கிவிடுவான்." (அல் புகாரி : 415)
- மேலும், ஒருவர் இக்கலிமாவை நம்பிய நிலையில் இதனை மொழிந்தவாறு மரணித்தால், அவர் சுவனவாதிகளுள் ஒருவராக கணிக்கப்படுவார். இதனை நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை என்பதை அறிந்த நிலையில் ஒருவர் மரணித்தால், அவர் சுவனம் நுழைவார். (அஹ்மத் : 464)
- எனவே, இதனைப் பற்றி அறிந்துகொள்வது ஒரு முஸ்லிமின் மீதுள்ள மிகப்பெரிய முக்கியமான கடமையாகும்.

"லாஇலாஹ இல்லல்லாஹ்" என்பதன் கருத்து.
வணங்கப்படுவதற்குரிய உண்மையான இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவரும் இல்லையென்பதே இதன் அர்த்தமாகும்.
இவ்வாறு சொல்வதானது, தெய்வீகப் பண்புகளை அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் வழங்க முடியாது. மேலும், இணையேதும் கற்பிக்காத நிலையில் இவைகளை முழுமையாக அல்லாஹ்விற்கு மாத்திரமே உறுதியாக வழங்குதல் வேண்டும் என்பதையே உணர்த்துகின்றது.
"இலாஹ்" என்ற அறபுப் பதமானது, வணங்கப்படும் இறைவன்'எனும் பொருளைக் குறிப்பதற்குப் பயண்படுத்தப்படும்.
எனவே, ஒருவன் ஏதாவது ஒன்றை வணங்கினால், அவன் அல்லாஹ்வை விடுத்து அதனையே கடவுளாக எடுத்துக் கொண்டான் என்றே கருதப்படும்.
"அல்லாஹ்" என்ற உண்மையானதோர் இறைவனைத் தவிரவுள்ள அனைத்துக் கடவுள்களும் போலியானவைகளே.
ஆகவே, வணங்குவதற்குத் தகுதியானவன் அவன் மாத்திரமே. மனித உள்ளங்கள் அன்போடும், கௌரவத்தோடும், பணிந்தும், பயந்தும் அவனை மாத்திரமே வணங்குகின்றன.
அவன் மீது நம்பிக்கை கொண்டு அவன் மாத்திரமே உதவிக்கு அழைக்கப்படுவதோடு, காரியங்கள் அனைத்தும் அவனிடமே ஒப்படைக்கப்பட்டு அவனுக்கே தொழுகைகளும் நேர்ச்சைகளும் செய்யப்படுகின்றன.
எனவே, அவனுக்கு மாத்திரமே மனத் தூ ய்மையோடு வணக்கங்கள் செய்யப்படல் வேண்டும்.
இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் :
"இன்னும், அல்லாஹ்வை அவனுக்காகவே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாக, (அனைத்து தீயவழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின் பால்) சாய்ந்தவர்களாக" (அல் பையினா : 5)
"லாஇலாஹ இல்லல்லாஹ்" என்ற திருக்கலிமாவின் அர்த்தத்தை கவனத்திற்கொண்டவராக, மனத்தூய்மையோடு ஒருவர் அல்லாஹ்வை வணங்கினால் அவர் மணமான, கௌரவமான, சுபீட்சமான, சந்தோஷகரமானதொரு வாழ்வைப் பெற முடியும்.
அல்லாஹ் ஒருவனை மாத்திரம் வணங்குவதன் மூலமே மனித உள்ளங்கள் அமைதியையும், சந்தோஷத்தையும், மன ஆறுதலையும் பெறுகின்றன.
இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் :
"ஆண் அல்லது பெண் அவர் விசுவாசங்கொண்டவராக இருக்க, யார் நற்செயலைச் செய்தாரோ நிச்சயமாக நாம் அவரை நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம்." (அந் நஹ்ல் 97)
"லாஇலாஹ இல்லல்லாஹ்" என்பதன் கூறுகள்:
- உயர்ந்த இத்திருக்கலிமாவானது, இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. இதன் கருத்துக்களையும் இது கொண்டிருக்க வேண்டிய அம்சங்களையும் புரிந்துகொள்வதற்கு இவ்விரு கூறுகளையும் அவசியம் தெரிந்து கொள்ளல் வேண்டும் :
-
1
முதற் பகுதி: "லாஇலாஹ" : ( எந்தவொரு இறைவனும் இல்லை) என்பதாகும். அல்லாஹ் அல்லாதவைகளை வணங்குவதனை இது மறுத்துரைப்பதோடு,அவனுக்கு இணை கற்பிப்பதனையும் தகர்த்தெரிகின்றது. மேலும், வேறு கடவுள்களுக்கு வணக்கங்கள் மேற்கொள்வதனை நிராகரிக்குமாறும் வலியுறுத்துகின்றது.அந்தக் கடவுள் மனிதனாகவோ, மிருகமாகவோ, சிலையாகவோ, கோளாகவோ அல்லது வேறேதும் ஒன்றாகவோ இருக்கலாம்.
-
2
இரண்டாம் பகுதி: "இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர) என்பதாகும். தொழுகை, பிரார்த்தனை, பரம்சாட்டுதல் போன்ற அனைத்து வகை வணக்கங்ளையும் அல்லாஹ்வுக்காக மாத்திரம் நிறைவேற்றல்.
-
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத நிலையில்,அனைத்து வகை வணக்கங்களையும் அவன் ஒருவனுக்காக மாத்திரம் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஒருவர் அந்த வணக்கங்களுள் ஒன்றை வேறொருவருக்காகச் செய்தால், அல்லாஹ்வுக்கு அவர் இணை கற்பித்துவிட்டார்.
இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் :
"மேலும், (நபியே) எவன் அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரிய நாயனை அழைக்கின்றானோ அவனுக்கு, அதைப் பற்றி யாதொரு சான்றும் இல்லை. அவனுடைய கணக்கெல்லாம் அவனுடைய இரட்சனிடத்தில்தான்(உண்டு) நிச்சயமாக நிராகரிக்கக்கூடியவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்:" (அல் முஃமினூன் 117)
அல்லாஹ்வின் பின்வரும் வசனங்களில் "லா இலாஹ இல்லல்லாஹ்" எனும் திருக்கலிமாவின் கருத்தும் அதன் கூறுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
"ஆகவே, எவர் தாகூத்தை (ஷைத்தானை)நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வை விசுவாசிக்கின்றாரோ அவர்,திட்டமாக அறுந்து போகாத பலமான கயிற்றைப் பற்றிப்பிடித்துக்கொண்டார்." (அல் பகறா : 256)
அல்லாஹ்வின் கூற்றாகிய (فمن يكفر بالطاغوت) என்பது கலிமாவின் முதற்கூறான "லா இலாஹ” என்பதன் கருத்தையும் (يؤمن بالله) என்ற அல்லாஹ்வின் கூற்றானது கலிமாவின் இரண்டாம் கூறான "இல்லல்லாஹ்" என்பதன் கருத்தையும் கொடுக்கின்றது.
