முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரென சாட்சி கூறுதல்

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரென சாட்சி கூறுதல்

நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளல்



எமது நபியின் பெயர்


முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு அப்தில் முத்தலிப் இப்னு ஹாஷிம் அல் குறைஷி. நபி (ஸ ல்) அவர்கள் அறபியர்களுள் மிகச் சிறந்த பரம்பரையைச் சார்ந்தவர்கள். 


மனித சமூகம் அனைத்திற்குமான அல்லாஹ்வின் ஒரு தூதர் :


அல்லாஹ் எமது நபி (ஸல்) அவர்களை அனைத்து நிற, இன மக்கள் எல்லோருக்கும் தூ தராக அனுப்பியிருக்கின்றான். அவருக்கு கட்டுப்பட்டு நடப்பதை மனிதர்கள் அனைவரினதும் கடமையெனவும் அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

"மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன் என நபியே நீங்கள் கூறுங்கள். (அல் அஃறாப் : 158)


நபியவர்கள் மீது அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது


அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல் குர்ஆன் எனும் தனது உன்னத வேதத்தை இறக்கியருளினான். இதில் எந்தவொரு இடத்திலும் பிழைகள் இடம்பெறவில்லை.


முஹம்மத் (ஸல்) அவர்கள் நபிமார்கள் மற்றும் றஸூல்மார்களுள் இறுதியானவர்


முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் நபிமார்களில் இறுதியானவராக அனுப்பி வைத்தான். அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுவது போன்று இவருக்குப் பின்னர் எந்தவொரு நபியும் வரமுடியாது.

"எனினும் அல்லாஹ்வின் தூதரும் நபிமார்களின் முத்திரையுமாவார்" (அல் அஹ்ஸாப் 40)




1- பிறப்பு

கி.பி. 570 ஆம் ஆண்டு மக்காவில் தந்தையை இழந்த ஓர் அநாதையாக நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். சிறு வயதினில் தாயை இழந்த இவர்கள் தனது பாட்டனார் அப்துல் முத்தலிபின் பராமரிப்பில் வாழ்ந்தார்கள். அவரின் மரணத்தை அடுத்து அவரின் பெரிய தந்தை அபூ தாலிபிடம் வாலிப வயது வரை வளர்ந்தார்கள்.


2- வாழ்வும் வளர்ச்சியும்

நுபுவ்வத்திற்கு முன்னர் (கி.பி. 570-610) நாற்பது வருடங்களாக அவருடைய குறைஷ் வம்சத்தாரிடையே வாழ்ந்து வந்தார்கள். அக்காலப் பகுதியில் அவர் பண்பாட்டுக்கும் தனித்துவத்திற்கும் உதாரணப் புருஷராகத் திகழ்ந்தார்கள்.

அம்மக்களிடையே இவர்கள் உண்மையாளர்", "நம்பிக்கையாளர்" என்ற சிறப்புப் பெயர்கள் கொண்டு மிகவும் பிரபல்யமாக அழைக்கப்பட்டார்கள்.

அப்போது இவர்கள் ஆடுகளை மேய்க்கும் இடையராகவும் பின்னர் ஒரு வர்த்தகராகவும் தொழிற்புரிந்து வந்தார்கள்.

இஸ்லாத்திற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் இப்றாஹீம் நபியின் மார்க்கத்தின் அடிப்படையில் தூய முறையில் அல்லாஹ்வை வணங்கி வந்ததோடு, சிலை வணக்கம் மற்றும் அது சார்ந்த ஆசாரங்கள் என்பனவற்றை மறுதலித்தும் வந்தார்கள்.


3- தூதுப் பணி

நபி (ஸல்) அவர்கள் தனது நாற்பதாவது வயதினை  நிறைவுசெய்த பின்னா,  "ஜபலுன் நூர்" (மக்காவிற்கு அண்மையிலுள்ள ஒரு மலை)  எனுமிடத்திலுள்ள "ஹிறா" குகையில் தனிமையிலிருந்துகொண்டு சமூகத்தைப் பற்றி ஆழமாக சிந்தித்து வந்ததோடு, அல்லாஹ்வை வணங்கியும் வந்தார்கள்.

இந்நேரமே, அல்லாஹ்விடமிருந்து வஹீ இறங்க ஆரம்பித்ததோடு, அல்குர்ஆனின் பின்வரும் முதலாவது இறைவசனம் அவருக்கு இறக்கியருளப்பட்டது. "படைத்த உங்கள் இறைவன் பெயரால் ஓதுவீராக" இந்தத் தூது ஆரம்பித்தது முதற் கொண்டு மனித இனத்திற்கான அறிவொளி, இறைவழிகாட்டல் என்ற அம்சங்களைக் கொண்ட புதியதொரு யுகம் தோன்றிவிட்டதாக இவ்வசனம் இங்கு பிரகடனப்படுத்துகின்றது.

பிறகு, அல்குர்ஆன் நபியவர்கள் மீது 23 ஆண்டுகளாக தொடர்ந்தேர்ச்சையாக இறக்கியருளப்பட்டது.


4- ஆரம்பக் கட்டப் பிரசாரம்

நபி (ஸல்) அவர்கள் தமது பிரசாரத்தை மூன்று வருடங்களாக இரகசியமாகவே மேற்கொண்டார்கள். பின்னர் அதனை பத்து வருடங்களாக பகிரங்கமாக முன்வைத்தார்கள்.

இக்காலப் பகுதியில் நபியவர்களும் அவர் தோழர்களும் அவரது கோத்திரமான குறைஷி களால் இழைக்கப்பட்ட பல்வேறு வகையான அநியாயம் மற்றும் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

இந்நிலையில், ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்கு வரும் மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள்.

இவ்வாறு மதீனாவிலிருந்து வந்த மக்கள் இஸ்லாத்தை   ஏற்றுக்கொண்டதோடு,மக்காவிலுள்ள முஸ்லிம்களும் மதீனாவை நோக்கி சிறுகச் சிறுக இடம்பெயர்ந்துசெல்ல ஆரம்பித்தனர்.


5- புலப்பெயர்வு (ஹிஜ்ரத்)

நபியவர்கள் தமது 53 வது வயதினில், அன்று "யத்ரிப்" என்று அழைக்கப்பட்டு வந்த "மதீனா" எனும் நகருக்கு நபியவர்கள் கி.பி 622 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றார்கள்.

நபியவர்களின் பிரச்சாரத்தை எதிர்த்த குறைஷித் தலைவர்கள் சதி தெய்து இவரைக் கொலை செய்ய முயற்சித்த பிறகு தான் நபியவர்கள் மதீனா நோக்கிய இப்பயணத்தை மேற்கொண்டார்கள்.

அங்கு, நபியவர்கள் பத்து வருடங்கள் வாழ்ந்தார்கள். அக்காலப் பகுதியில் இவர்கள் மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்ததோடு, தொழுகை மற்றும் ஸகாத் உள்ளிட்ட இஸ்லாத்தின் அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றுமாறும் முஸ்லிம்களைப் பணித்தார்கள்.


6- இஸ்லாத்தைப் பரப்புவதற்கான அவரது முயற்சிகள் :

நபி (ஸல்) அவர்கள் "ஹிஜ்ரத்" செய்த பிறகு (622 -632) மதீனாவில் இஸ்லாமிய நாகரிகத்திற்கான அடித்தளமிட்டார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் சிறப்பம்சங்களை அவர்களிடையே நிலைநிறுத்தி, வர்க்கப் பகைமையினை இல்லாமற் செய்து அறிவொளியைப் பரப்பியதோடு, நீதி, நியாயம், சகோதரத்துவம், ஒத்துழைப்பு, ஒழுங்கமைப்பு என்ற அடிப்படையான சமூகக் கோட்பாடுகளையும் நிறுவினார்கள்.

சில வர்க்கத்தினர் இஸ்லாத்தை தீர்த்துக் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் விளைவாக பல்வேறு கைகலப்புக்களும் யுத்தங்களும் இடம்பெற்றன.

ஆனால் அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கும் அவன் தூதருக்கும் உதவிசெய்தான். பிறகு உயர்ந்த இம்மார்க்கத்தை மனப்பூர்வமாக ஏற்றுத் தெரிவுசெய்து, மக்காவிலும் இன்னும் பல நகரங்களிலும் வாழ்ந்த மக்களும் அறபுத்தீபகற்பத்தில் இருந்த பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த மக்களும் பாரிய அளவில் இஸ்லாத்தில் தொடராக இணைய ஆரம்பித்தார்கள்.


7- மரணம்

நபியவர்கள் தமது தூதினை மக்களுக்கு எடுத்துரைத்து, தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பினையும் நிறைவேற்றி, இந்த மார்க்கம் எனும் அருட்கொடையை அவர்கள் மீது அல்லாஹ் முழுமைப்படுத்திய பிறகு ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ஸபர்" மாதம், அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.

இதன் விளைவாக ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு றபீஉல் அவ்வல் மாதம் திங்கள் பகல் (கி.பி.632/06/08 ஆம் திகதி) இறையடி எய்தினார்கள். அப்போது அவரின் வயது 63 ஆகும். மஸ்ஜிதுன் நபவிக்குப் பக்கத்திலுள்ள ஆயிஷா (றழி) அவர்களின் வீட்டிலேயே அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.




“முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்" என்று சாட்சி கூறுதல் என்பதன் கருத்து :


அவர் கூறிய செய்திகளை உண்மைப்படுத்தி, அவரால் ஏவப்பட்ட விடயங்களை செய்வதோடு, விலக்கப்பட்ட விடயங்களை செய்யாது தவிர்ந்து கொள்ளல்.

மேலும், அவர் எமக்கு கற்பித்த முறைப்படி அல்லாஹ்வை நாம் வணங்குதல் போன்ற அம்சங்களே இதன் பொருளாகக்கொள்ளப்படுகின்றது.


"முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதா" என்ற எமது நம்பிக்கை எவ்வாறான விடயங்ளை உள்ளடக்கியுள்ளது?

  1. நபியவர்கள் கூறிய அனைத்து அம்சங்களையும் உண்மையென நம்புதல். இது பின்வரும் விடயங்களை உள்ளடக்கியுள்ளது::

    • மறுமை நாள், சுவனம் மற்றும் அதன் சுகங்கள், நரகம் மற்றும் அதன் தண்டனைகள். மேலும், ஏனைய மறைவான விடயங்கள்.

    • மறுமை நாளில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் அதன் அடையாளங்கள். மேலும், இறுதி நாளின் போது நடக்கவிருக்கும் நிகழ்வுகள்.

    • முன்னைய சமூகங்கள் பற்றிய செய்திகள், நபிமார்கள் மற்றும் அவர்களது சமூகங்களுக்கு மத்தியில் நடைபெற்ற நிகழ்வுகள்.

  2. அவர்கள் பணித்த விடயங்களைச் செய்தலும் தடைவிதித்த விடயங்களை தவிர்த்துக்கொள்ளலும்.  இது பின்வரும் விடயங்களை உள்ளடக்கிக் கொள்கின்றது :


    • நபி (ஸல்) அவர்கள் பணித்த விடயங்களை நடைமுறைப்படுத்தல். மேலும், அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொண்ட "வஹீ" மூலமே அன்றி மனோ இச்சைப் படி எதனையும் அவர் பேச மாட்டார் என்று நம்புதல். அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: "எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கீழ்படிந்து நடக்கின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கீழ்படிந்து விட்டார்." (அந் நிஸா 80)

    • தீய பண்புகள் மற்றும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடத்தைகள் போன்ற அல்லாஹ் எமக்கு தடைசெய்த விடயங்களை விட்டு விலகிக் கொள்ளல். இவ்வாறான (ஹராமான) அம்சங்களை அல்லாஹ் தடைசெய்திருப்பதற்கான பின்னணி, அவன் விரும்பும் தெய்வீக ஞானம் சார்ந்ததொரு காரணியாகவோ அல்லது எமது நலன் சார்ந்ததொரு காரணியாகவோ இருக்கலாம் என்று நாம் முழுமையாக நம்புதல் வேண்டும். எமக்கெனவுள்ள இந்நலன்கள் சில வேளைகளில் எமக்குப் புரியாத விடயங்களாகக் கூட இருக்கலாம்.

    • அவருடைய உத்தரவுகளை செயற்படுத்துவதும் அவர் தடுத்தவைகளை விட்டு விலகி வாழ்வதும் ஈருலகிலும் எமக்கு நன்மையையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்து தரும் என்று உறுதியாக நாம் நம்புதல் வேண்டும். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: "அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்படியுங்கள் (அதனால்) நீங்கள் (அல்லாஹ்வின்) கிருபைக்குள்ளாக்கப்படுவீர்கள்." (ஆலு இம்ரான் 132)

    • ஒருவர் நபியவர்களின் உத்தரவிற்கு புறம்பாக நடந்தால், அவர் அல்லாஹ்வின் கடுமையான வேதனைக்கு உள்ளாகுவார் என்றும் நாம் உறுதியாக நம்ப வேண்டும். இதனை அல்லாஹ் இவ்வாறு  குறிப்பிடுகின்றான் :  "ஆகவே, (நம் தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களே அத்தகையவர்கள், (உலகில்) தங்களுக்கு யாதொரு துன்பம் பிடித்துவிடுவதையோ அல்லது துன்புறுத்தும் வேதனை பிடித்துவிடுவதையோ பயந்து கொண்டிருக்கவும்." (அந் நூர் 63)

    நபியவர்களின் சுன்னாவில் காணப்படும் உண்மையென றுதிசெய்யப்பட்ட விடயங்களை நம்பி  ஏற்றுக்கொள்வதானது, ஒரு முஸ்லிம் மீதுள்ள கட்டாயக் கடமையாகும்.


  3. நபி (ஸல்) அவர்கள் வழங்கிய வழிகாட்டலுக்கேற்பவே அல்லாஹ்வை நாம் வணங்க வேண்டும். இது கட்டாயம் உறுதிசெய்து கொள்ளவேண்டிய போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ளது:

    அவரைப் பின்பற்றுதல்:- நபி (ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் உள்ளிட்ட முழு வாழ்வும் வழிகாட்டலும் எமது வாழ்வின் சகல துறைகளுக்குமான முன்மாதிரியாகும். நபியவர்களது ஸுன்னாவை ஓர் அடியான் அதிகமாக பின்பற்றுமளவு அவன் அல்லாஹ்வின் நெருக்கத்தையும் உயர் அந்தஸ்த்துக்களையும் பெறுகின்றான். இதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:  (நபியே! மனிதர்களிடம்,) நீர் கூறுவீராக : "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; மிகக் கிருபையுடையவன். (ஆலு இம்ரான் 31)

     இஸ்லாம் முழுமையானது : இஸ்லாத்தையும் அதன் சட்டங்களையும் எதுவிதக் குறையுமின்றி முழுமையாகவே நபியவர்கள் போதித்தார்கள்.எனவே, நபி (ஸல்) அவர்கள் எமக்கு அறிமுகப்படுத்தாத எந்தவொரு வணக்கத்தையும் புதிதாக அறிமுகப்படுத்துவதற்கு எந்தவொரு மனிதனுக்கும் அனுமதி கிடையாது.

     இஸ்லாம் எக்காலத்திற்கும் எல்லா இடங்களுக்கும் பொருத்தமானது:- குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம்பெற்றுள்ள இஸ்லாத்தின் சட்டங்கள் மற்றும் போதனைகள் எக்காலங்களுக்கும் அனைத்து இடங்களுக்கும் பொருத்தமானதாகும். இல்லாமையிலிருந்து மனிதனை படைத்து, உருவாக்கிய அல்லாஹ்வை விட மனித நலன்களை வேறு எவரும் அறிய முடியாது.

     நபியவர்களின் ஸுன்னாவைப் பின்பற்றுதல்:- வணக்கவழிபாடுகள் அல்லாஹ்வால் ஏற்று அங்கீகரிக்கப்படுவதற்கு, அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு நபியவர்கள் வழிகாட்டிய விதத்தில் அவைகள் செய்யப்படல் வேண்டும்.  இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் :  "ஆகவே, எவர் தன் இரட்சகனைச் சந்திக்க ஆதரவு வைக்கின்றாரோ, அவர் நற்கருமங்களைச் செய்யவும்; தன் இரட்சகனின் வணக்கத்தில், அவர் எவரையும் இணையாக்க வேண்டாம்." (அல் கஹ்ப் :110) இந்த வசனத்திலுள்ள "صالحًا" என்ற சொற்பிரயோகத்தின் கருத்து "நபியவர்களின் ஸுன்னாவை ஒத்ததாக இருத்தல் வேண்டும் என்பதாகும்.

     மார்க்க விடயங்களில் புதுமைகளைப் புகுத்துதல் ஹராமாகும்:- அல்லாஹ்வை வழிபடும் நோக்கில், நபியவர்களுடைய ஸுன்னாவில் இல்லாத ஒரு வணக்கத்தை புதிதாக உருவாக்கினால், அது மார்க்கத்திற்கு முரணானது. மேலும்,அதனைச் செய்பவர் பாவியாகக் கருதப்படுவதோடு அவரது அவ்வணக்கமானது மறுக்கப்பட்டு விடும். இதற்கு உதாரணமாக, மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் தொழுவதைக் குறிப்பிடலாம். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:   "ஆகவே, (நம் தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களே அத்தகையவர்கள், (உலகில்)  தங்களுக்கு யாதொரு துன்பம்   பிடித்துவிடுவதையோ அல்லது துன்புறுத்தும் வேதனை பிடித்துவிடுவதையோ பயந்து கொண்டிருக்கவும்." (அந் நூர் : 63) “யாராவது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கினால், அது அல்லாஹ்வால் மறுக்கப்பட்டு விடும்." என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (அல் புகாரி: 2550, முஸ்லிம்: 1718)


    மார்க்கத்திலுள்ள வணக்க வழிபாடுகளில் கூட்டுதல், குறைத்தல் புதுமைகளைப் புகுத்துதல் போன்றவற்றை இந்த மார்க்கம் மிகக் கடுமையாக தடைசெய்திருப்பதற்குரிய நோக்கம், திரிவுபடுத்தல், மனிதர்களின் மனோ இச்சைகளுக்கு உட்படுதல் போன்ற அபாயங்களிலிருந்து இந்த மார்க்கத்தை பாதுகாப்பதாகும். இதற்கப்பால், இந்த மார்க்கம் மனித சமூகத்திற்கு பணி செய்து அதன் நிகழ்கால, எதிர்கால நிலைகளை வளர்க்கும் நோக்கில் இந்த பிரபஞ்சத்தில் புதுமைகளை ஏற்படுத்தி அதன் இரகசியங்களை கண்டுபிடிப்பதற்கு மனித உள்ளங்களுக்கு ஊக்கமளித்துள்ளது.